தஞ்சாவூர் சுற்றுலா
தஞ்சை பெரிய கோயில் - பிரகதீஸ்வரர் கோயில்
சுந்தரசோழ மன்னன் (இரண்டாம் பாராந்தகன்), வானவமகாதேவியின் மகனான ராஜராஜ சோழனால் (கி.பி. 985-1012) உன்னதமான பிரகதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. கட்டட கலையின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோயில் அமைந்துள்ளது. ராஜராஜசோழனின் 19வது வயதில் கோயில் பணிகள் துவங்கி, அவரது 25வது வயது முடியும் தருவாயில் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. கோயிலின் பிரதான கடவுளாக சிவபெருமான் வீற்றிருக்கிறார். இங்குள்ள சிவலிங்கம் மிகப்பெரியதாகும். இந்த கோயில் பெரிய கோயில் என்றே அழைக்கப்படுகிறது. கோயிலை சுற்றிலும் ஒரு பக்கம் அகழியும் , மறுபக்கம் அணைக்கட்டு ஆறும் உள்ளது. மற்ற கோயில்களை போலல்லாது இக்கோயிலின் கோபுரம் சிறப்பு வாய்ந்தது. கர்ப்பகிரகத்தின் மேலே உயரமான கோபுரம் உள்ளது. இதன் உயரம் 216 அடியாகும். கோயிலின் ஸ்தூபம் வெண்கலத்தால் ஆனது. சோழர்கள் மற்றும் நாயக்கர்களின் பெருமையை பறைசாற்றும் வகையில் கோயில் சுவற்றில் ஓவியங்கள் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையானதாகும்.கோயிலில் சிவனுக்கு எதிரே மிகப்பெரிய நந்தி சிலை உள்ளது. பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள சிற்பங்களும், வேலைப்பாடுகளும் ஆயிரம் ஆண்டுகளை கடந்தவையாகும். மனோரா கோபுரம் :
ஒரத்தநாட்டிலிருந்து சில கி.மீ. தூரத்தில் மனோரா கோபுரம் அமைந்துள்ளது. வித்தியாசமானதாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் இந்த கோபுரம் உள்ளது.தஞ்சாவூரில் இருந்து 65 கி.மீ தொலைவிலும், பட்டுக்கோட்டையில் இருந்து 135 கி.மீ தொலைவிலும் மனோரா கோபுரம் உள்ளது. இந்த இடம் சரபேந்திர ராஜபட்டினம் என அழைக்கப்படுகிறது. மனோரா என்ற பெயர் சிறிய கோபுரம் என பொருள் படும் மினாரெட் என்ற வார்த்தையில் இருந்து வந்தது. கோபுரத்தை சுற்றிலும் உறுதியான சுவர்களும், அரண்களும் உள்ளன. கோபுரம் 22.30மீ உயரமுடையது. இந்த கோபுரம் இரண்டாம் சரபோஜி மன்னரால் கட்டப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை :
அரண்மனையின் கிழக்கு முக்கிய வீதியில் ஆங்காங்கே பெரிய மற்றும் சிறிய கட்டடங்கள் காணப்படுகிறது. இவை நாயக்க மற்றும் மராத்திய மன்னர்களால் கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் மிகப்பெரிய முற்றம் உள்ளது. சுற்றிலும் பெரிய சுற்றுச் சுவர் மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள பெரிய கதவுகளுடைய நுழைவாயில் உள்ளது. பெரிய முற்றத்தின் வழி சென்றால் அங்கு பல தூண்களை உடைய பெரிய கூடம் உள்ளது. தெற்கு பக்கத்தில் 190 அடி உயரமுடைய எட்டு அடுக்குகளை உடைய கூட கோபுரம் உள்ளது. இது கண்காணிப்பு கோபுரம் என அழைக்கப்படுகிறது. கி.பி., 1855ம் ஆண்டு வரை தஞ்சை மன்னர்களின் படைக்கல கொட்டிலாக இந்த இடம் இருந்தது. இந்த அரண்மனையில் நாயக்க, மராத்திய மன்னர்களின் தர்பார் மற்றும் ராஜா சரபோஜி சரஸ்வதி மகால் நூலகம் ஆகியவை பார்க்கத் தகுந்த இடங்களாகும்
No comments:
Post a Comment